ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகாவில் உள்ள கன்னிராஜபுரம் கிராமத்தில் தூத்துக்குடியைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான உப்பளம், சுமார் 500 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டு வருவதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
கன்னிராஜபுரம், வேம்பார் பகுதிகளில் கஞ்சம்பட்டி ஓடை மற்றும் வேம்பாறு ஓடை உள்ளது. இந்த ஓடைகளில் சுமார் 18 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டப்பட்டு வருகின்றது. அணையில் உள்ள நீர் அனைத்தும் கன்னிராஜபுரம் பகுதியில் உள்ள சுமார் 500 ஏக்கர் நிலத்தில் தேக்கி வைக்கப்பட்டு அந்த நீர் கடலாடி தாலுகாவில் உள்ள 58 கிராம பொதுமக்களுக்கு குடிநீர் தேவைக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
மேலும் நீர்த்தேக்கம் இல்லாத நேரங்களில் அந்நிலத்தில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டு, அதிலிருந்து எடுக்கப்படும் குடிநீரை அனைத்து பொதுமக்களும் பயன்படுத்திவந்துள்ளனர். அந்த 500 ஏக்கர் நிலங்களில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களை தூத்துக்குடியைச் சேர்ந்த கண்ணா சில்க்ஸ் எனும் ஜவுளிக்கடை நடத்தி வரும் ஒரு தனியார் நிறுவனம் உப்பளம் அமைத்து அரசு அனுமதியின்றி ஆங்காங்கே 400 அடி ஆழத்தில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து அதிலிருந்து எடுக்கப்படும் நீர் மற்றும் கடல் நீருடன் கலந்து உப்பளம் அமைத்துள்ளனர்.
இதனால் தரைக்குடி, செவல்பட்டி, கன்னிராஜபுரம், வேம்பார், மூக்கையூர், சாயல்குடி மற்றும் கடலாடி ஆகிய பகுதிகளை ஒட்டியுள்ள சுமார் 58 கிராம மக்களின் பயன்பாட்டில் உள்ள குடிநீர் கிடைப்பதற்கான வாய்ப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஆகவே மேற்கண்ட கிராமத்தில் உள்ள நபர்கள் சுமார் 300க்கும் மேற்பட்டோர் கன்னிராஜபுரம் பேருந்து நிலையம் அருகில் தற்போது உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
இவர்கள் தகுந்த தகுந்த இடைவெளியுடன் அமர்ந்து உண்ணாவிரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர். அவர்களின் கோரிக்கையான தனியாருக்கு சொந்தமான உப்பளம் நீக்கப்படும் வரை தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் இந்த உப்பளம் தொடர்ந்து இயங்கி வந்தால் குடிநீர் ஆதாரம் பாதிக்கப்படும். மேலும் உப்பளத்திலிருந்து வெளியாகும் கழிவு நீர் அப்பகுதியில் உள்ள குழந்தைகள் மற்றும் முதியோருக்கு நோய் தொற்றுகளை ஏற்படுத்தும் ஆகவே அரசு தலையிட்டு தனியாருக்குச் சொந்தமான உப்பளத்தை உடனடியாக மூடுமாறு கோரிக்கை எழுப்பியுள்ளனர்.