ராமநாதபுரத்திலிருந்து தூத்துக்குடி வரை ஐஓசிஎல் நிறுவனம் சார்பில் 142 கிமீ நீளமுள்ள இயற்கை எரிவாயு குழாய் பதிக்கும் பணி 53 வருவாய் கிராமங்களின் ஒத்துழைப்புடன் நடைபெற்று வருகிறது.
பல கிராமங்களின் விவசாய நிலங்களை கடந்து 134 கிமீ வரை பணி நிறைவடைந்துள்ள நிலையில் தூத்துக்குடி மாவட்டம் குலையன்கரிசல், பொட்டல்காடு ஆகிய இரு கிராம பொதுமக்கள் இத்திட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்காததால் பணிகள் தடைப்பட்டுள்ளன.
இதனிடையே, பொட்டல்காடு கிராம பொதுமக்கள், தங்கள் கிராமம் வழியாக எரிவாயு குழாய் கொண்டு செல்லும்போது கிராமத்திற்கும், விவசாய நிலங்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என தெரிவித்து இத்திட்டத்தை மாற்றுப்பாதையில் செயல்படுத்த வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.
ஆனால், அதற்கு மாவட்ட நிர்வாகம், ஐஓசிஎல் நிர்வாகம் செவிசாய்க்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த பொட்டல்காடு கிராம பொதுமக்கள், ஊர்த்தலைவர் செல்வசேகர் தலைமையில் எரிவாயு குழாய் பதிப்பதை கண்டித்து கிராமத்தின் மையப்பகுதியில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து கிராம பொதுமக்கள் கூறுகையில், "மாற்றுப்பாதை இருக்கும் போது ஊருக்குள் எரிவாயு குழாய் பதிக்கக் கூடாது. ஊருக்குள் குழாய் பதித்து திடீரென விபத்து ஏற்பட்டால் எங்கள் கிராமம் மொத்தமும் பாதிக்கப்படும்" எனத் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து இந்தக் கிராமத்திற்கு செல்லும் அனைத்து பாதைகளையும் காவல்துறையினர் அடைத்தனர். அந்தப் பகுதியில், நூற்றுக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவிவருகிறது.
இதையடுத்து சார்ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங் கலோன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உள்ளிட்ட அலுவலர்கள் போராட்டம் நடத்திய மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது, கிராம பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் எனத் தெரிவித்ததால் அலுவலர்கள் திரும்பிச் சென்றனர்.
இதையும் படிங்க: ஓட்டுநர் நலவாரியம் அமைக்குமாறு உண்ணாவிரதப் போராட்டம்