சென்னை ஆவடி அருகே நெமிலிச்சேரி, பாரிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவருகின்றனர். இவர்களுக்கு பல வருடங்களாக வீட்டு மனைப்பட்டா, சாதி சான்றிதழ் வழங்கப்படாமல் உள்ளது.
இது குறித்து பலமுறை தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்டோருக்கு புகார் மனுக்கள் அனுப்பிவந்துள்ளனர்.
இருந்த போதிலும் அலுவலர்கள் எவ்வித நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்துள்ளனர். இந்நிலையில், நேற்று தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் மாவட்டச் செயலாளர் தமிழரசு தலைமையில் 100-க்கும் மேற்பட்ட இருளர்கள் ஆவடி தாலுகா அலுவலகம் முன்பு திரண்டனர்.
பின்னர், அவர்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு வீட்டு மனைப்பட்டா, சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல் துறையினர் பழங்குடியின மக்களிடம் கலைந்துசெல்லுமாறு அறிவுரை வழங்கினர்.
அப்போது, அவர்கள் வட்டாட்சியர் வந்து எங்களது கோரிக்கையை நிறைவேற்றித் தருவதாக உறுதி அளித்தால்தான் இங்கிருந்து கலைந்துசெல்வோம் எனத் திட்டவட்டமாகக் கூறினர்.