மதுரையில் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துவருகிறது. இதனைக்கட்டுப்படுத்தும் நோக்கில் வரும் 30ஆம் தேதிவரை முழு ஊரடங்கை பிறப்பித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இந்த முழு ஊரடங்கு எதிரொலியாக மதுரை மாநகர் பகுதி முழுவதும் பொது போக்குவரத்துக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
சாத்தூர், கோவில்பட்டி, விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வரக்கூடிய பேருந்துகள் திருமங்கலத்தில் நிறுத்தப்படுகின்றன. இதனால், வெளியூர் பயணிகள் மதுரை செல்ல முடியாமல் அவதியுற்றனர். மேலும் திருமங்கலத்திலிருந்து மதுரை பெரியார் பேருந்து நிலையத்திற்குச் செல்லும் நகரப் பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் வேலைக்குச் செல்வோர் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
திருமங்கலம் நகர்ப் பகுதியில் வெளியூர் பேருந்து நிலையம் இல்லாததால், அப்பகுதியின் காவல் நிலையம் முன்பு சாலை ஓரத்தில் பேருந்துகள் நின்றுசெல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
திருமங்கலம் பகுதியில் கடந்த மூன்று தினங்களில் 20-க்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். ஆதலால், வெளியூர் பேருந்து நிலையத்தை திருமங்கலம் எல்லைப்பகுதியில் நிறுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கைவைக்கின்றனர்.
மேலும் திருமங்கலம் நகர்ப் பகுதியிலிருந்து மதுரை செல்லும் அனைத்துப் பேருந்துகளும் ரத்துசெய்யப்பட்டுள்ளன. இதனால் வேலைக்குச் செல்வோரும் தொழில் ரீதியாக மதுரைக்குச் செல்லும் பயணிகளும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.