தென்காசி மாவட்டம் கடையம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 400 க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் இயங்கி வருகின்றன. தாறுமாறாக பெருகிவிட்ட இந்த செங்கல் சூளைகளுக்கு எரிபொருள் தேவைக்காக தமிழ்நாடு அரசின் மாநில சின்னமான பனைமரங்களை வெட்டி சூறையாடி வருவது தொடர் கதையாகி வருகிறது.
இது குறித்து பனைவாழ்வியல் இயக்கம் சார்பில் மாவட்ட நிர்வாகம் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்களுக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது. ஆழ்வார்குறிச்சி காவல் நிலையத்தில் இந்த சம்பவம் தொடர்பாக இளைய பாரதம் என்ற அமைப்பின் சார்பில் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் மற்றும் மர்மகும்பல் மீது புகார் அளிக்கப்பட்டு விசாரணையில் உள்ளது.
இந்த நிலையில் தினமும் கடையம் பகுதிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து மாநில சின்னமான பனைமரங்கள் வெட்டப்பட்டு டன் கணக்கில் லாரிகளில் எடுத்து வந்து செங்கல் சூளைகளுக்கு எரிபொருளாக பயன்படுத்துகின்றனர்.
உடனே மாவட்ட நிர்வாகம் பனை மரங்களை வெட்டும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.