12ஆவது உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 6ஆவது லீக் போட்டி நாட்டிங்ஹாமில் நடைபெற்றுவருகிறது.
இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் முதலில் பந்துவீச தீர்மானித்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்ய வந்த பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம், முகமது ஹஃபிஸ், கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது ஆகியோர் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். இதனால், பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 348 ரன்களை குவித்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக, முகமது ஹஃபிஸ் 62 பந்துகளில் எட்டு பவுண்டரிகள், இரண்டு சிக்சர்கள் என 84 ரன்களிலும், பாபர் அசாம் 66 பந்துகளில் நான்கு பவுண்டரிகள், ஒரு சிக்சர் என 63 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் கிறிஸ் வோக்ஸ், மொயின் அலி ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
முன்னதாக, வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் 105 ரன்களுக்கு சுருண்ட பாகிஸ்தான் அணி, இன்றைய போட்டியில் எழுச்சி பெற்றுள்ளது அந்த அணியின் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.