நாகை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் வட்டாரம் ஆறுபாதி கிராமத்தில் அமைக்கப்பட்ட மக்காச் சோள செயல்விளக்க திடலில் படைப்புழுத் தாக்குதலின் தன்மை குறித்து நடைபெற்ற செயல் விளக்க கூட்டத்தில், தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் பங்கேற்று விவசாயிகளுக்கு ஆலோசனைகள், மக்காச்சோள விதைகளை வழங்கினர்.
கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் நீர்நுட்ப மையம், ஆடுதுறை தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையம் ஆகியவை இணைந்து, உலக வங்கி நிதியுடன் நீர்வள நிலவளத்திட்டம் கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் தொடங்கி செயல்படுகிறது.
இத்திட்டத்தில் மாவட்டத்தில், 250 ஏக்கர் பரப்பளவில் குறுவைப் பயிருக்கு மாற்றுப் பயிராக மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது. ஆறுபாதி கிராமத்தில் அமைக்கப்பட்ட மக்காச்சோள செயல்விளக்க திடலில் படைப்புழு தாக்குதலின் தன்மை குறித்த செயல்விளக்க கூட்டத்தில், தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலைய இயக்குநர் அம்பேத்கர் பங்கேற்று, கோடை உழவில் சட்டி கலப்பையைக் கொண்டு உழுவதால் படைப்புழுவின் கூட்டுப்புழுக்கள் முற்றிலுமாக அழிக்கப்படுவதோடு, களையின் தாக்கமும் குறையும் என்று விவசாயிகளுக்கு விளக்கினார்.
இந்தக் கூட்டத்தில் நீர்வள, நிலவளத் திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜு, நெல் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள், விவசாயிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.