தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் மன்னார்குடியில் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் பேசுகையில், "இந்தியா முழுவதும் உர விற்பனை நிறுவனங்கள் டிஜிட்டல் பணபரிவர்த்தனை மூலம் மட்டுமே விவசாயிகளிடம் உரத்தை விற்பனை செய்ய வேண்டும்.
அதற்கான வகையில் வரும் ஜூலை 15 ஆம் தேதிக்குள் டிஜிட்டல் பணவர்த்தனைக்கான ரகசிய குறியீட்டு எண் பெற வேண்டும் என மத்திய அரசு சார்பில் அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. விவசாயிகள் ஒவ்வொருவரும் ஆன்ட்ராய்டு செல்போன் அவசியம் கையில் வைத்துக்கொள்வதோடு, வங்கிகளில் இணையதள வங்கி பண பரிவர்த்தனைக்கான வசதியை பெற வேண்டும் என நிர்பந்திக்கப்பட்டுள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன.
இந்த அறிவிப்பை ஏற்று உடன் செயல்படுத்த உர விற்பனை நிறுவனங்கள் முன்வர வேண்டும் இல்லையேல் சட்ட நடவடிக்கை மேற்கொள்வோம் என மாவட்ட வேளாண் துறை அலுவலர்கள் மிரட்டிவருவதோடு பத்திரிகைகளில் அறிக்கைகளும் வெளியிட்டு வருகின்றனர்.
கரோனா பாதிப்பால் விவசாயிகள் பல்வேறு இழப்புகளை சந்தித்து வறுமையில் தவித்து வருகின்றனர். இந்நிலையில், ரூ. 15 ஆயிரத்துக்கு மேல் விலை கொடுத்து ஆன்ட்ராய்டு செல்போன் எப்படி வாங்க முடியும்? அப்படியே வாங்கினாலும் அதனை இயக்குவதற்கான பயிற்சி இல்லாத நிலை அறிந்தே மத்திய மாநில அரசுகள் விவசாயிகளை வஞ்சிக்கிறது.
இதனை உடனடியாக கைவிட வேண்டும். ரூ 1000 கோடி தமிழ்நாடு கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு கடன் வழங்க கரோனா சிறப்பு கூடுதல் நிதியாக தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளதாக நபார்டு வங்கி அறிவித்துள்ளது. இதனை பயன்படுத்தி விவசாயிகளின் நிலுவை கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் இல்லையெனில் ஒத்திவைத்துவிட்டு புதிய கடன் நிபந்தனையின்றி வழங்க உடன் முன்வர வேண்டும்.
தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்குவதில் பழைய நடைமுறையையே பின்பற்றிட வேண்டும். தற்போது, மேட்டூர் அணை நீர் இருப்பு வேகமாக குறைவதால் விவசாயிகளுக்கு மிகப்பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் சம்பா சாகுபடி பணிகள் சுமார் 9 லட்சம் ஏக்கரில் மேற்கொள்ள வேண்டும். எனவே கர்நாடகாவிடமிருந்து ஜனவரி மாதம் முதல் நமக்கு தர வேண்டிய சுமார் 50 டிஎம்சி தண்ணீரை பெற காவிரி ஆணையம் மூலம் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:ராணுவ வாகன விபத்தில் தமிழ்நாடு வீரர் பலி - சொந்த ஊரில் இன்று நல்லடக்கம்