தேனி மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்றால் இதுவரை 193 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் போடியைச் சேர்ந்த 53 வயதுடைய பெண், ஓடைப்பட்டியைச் சேர்ந்த 70 வயது முதியவர் என இருவர் உயிரிழந்தனர். 123 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
இந்நிலையில் தேனி மாவட்டம் போடி உள்கோட்டம் காவல் எல்லைக்குள்பட்ட சின்னமனூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்துவரும் சார்பு ஆய்வாளர் ஒருவருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 35 வயதுடைய இவருக்கு கடந்த சில நாள்களாக காய்ச்சல் இருந்துள்ளது.
இதனையடுத்து, அவர் தாமாகவே முன்வந்து அரசு மருத்துவமனையில் கரோனா கண்டறிதல் சோதனை செய்துகொண்டார். இதன் முடிவில் அவருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. பின்னர், சார்பு ஆய்வாளர் கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து அவர் பணிபுரிந்துவந்த சின்னமனூர் காவல் நிலையத்தில் கிருமிநாசினி மருந்து தெளித்து சுத்தம்செய்யப்பட்டது.
மேலும் காவலர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு காவல் நிலையம் கரோனா வைரஸ் நோய் தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு மூடப்பட்டது. இதையடுத்து சின்னமனூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்துவந்த அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்படவுள்ளது.