சென்னை ரிப்பன் மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஆணையர் பிரகாஷ், "சென்னை மாநகராட்சியில் உள்ள ஒவ்வொரு வார்டிலும் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு, அங்குள்ள மக்களுக்கு இரண்டு மருத்துவ குழுக்கள் மூலம் உடல் வெப்பநிலை, ஆக்சிஜன் அளவு போன்றவை கண்காணிக்கப்பட்டுவருகின்றன.
மேலும் மருத்துவ முகாம்கள் நடைபெறும் விவரங்கள், அதில் பங்கேற்றவர்கள் விவரங்களை தினமும் மாநகராட்சி ட்விட்டர் பக்கத்தில் பதிவுசெய்து வருகிறோம். அனைத்துத் தரப்பு மக்களும் வலைதளங்களைப் பயன்படுத்த முடியாது என்பதற்காக ஆட்டோக்களில் ஒலிபெருக்கி பயன்படுத்தி மருத்துவ முகாம்கள் நடைபெறும் விவரத்தைக் கூறிவருகிறோம்.
கரோனா நோய்த்தொற்றைக் குறைப்பதற்காகப் பல்வேறு வழிமுறைகளை மாநகராட்சி கையாண்டுவருகிறது.
மேலும் தற்போது நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் முகாம்களில் தனிமைப்படுத்தப்படுவதற்குப் பதிலாக, தேவையான வசதிகள் இருப்பின் அவர்களது வீட்டிலேயே மருத்துவர்களின் அறிவுரையின்படி தனிமைப்படுத்திக் கொள்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுவரை சென்னையில் மொத்தம் ஒரு லட்சத்து 20 ஆயிரம் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகள் உள்ளன.
மேலும், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களைக் கண்காணிக்கவும், அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்களை வாங்கி தருவதற்கும் நான்காயிரத்து 500 தன்னார்வலர்களை மாநகராட்சி நியமனம் செய்துள்ளது.
மக்கள் தொகை அதிகமுள்ள வார்டுகளில் ஐந்து தெருக்களுக்கு ஒரு தன்னார்வலர் எனவும் சிறிய அளவில் மக்கள்தொகை உள்ள வார்டுகளில் 10 முதல் 15 தெருக்களுக்கு ஒரு தன்னார்வலர் எனவும் நியமனம் செய்யப்பட்டுள்ளது. இந்தத் தன்னார்வலர்கள் அனைவருக்கும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தெருக்களில் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளைக் கண்காணிக்கவும், அவர்களைத் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு தேவையான அத்தியாவசிய பொருள்களை வாங்கித் தருவது போன்ற உதவிகளைச் செய்வார்கள்.
தன்னார்வலர்களுக்கு புத்தகப் பதிவேடு கொடுக்கப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் இருப்பவர்கள் ஏதாவது விதிமீறல் செய்கிறார்களா என்பதையும் மற்ற பரிசோதனை குறிப்புகளையும் அந்தப் புத்தகப் பதிவேட்டில் குறிப்பிட்டு அன்று மாலை அந்த வார்டில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தில் சமர்ப்பிப்பார்கள்.
வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டோர் வெளியே சுற்றாமல் இருப்பதின்மூலம் நோய்த் தாக்கத்தை குறைத்துவிடலாம். மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தில் 2000 படுக்கைகள் இந்த வார இறுதிக்குள் தயாராகிவிடும்.
ஐஐடி வளாகத்தில் 1200 படுக்கை வசதிகளும் அத்திப்பேட்டை குடியிருப்பில் நான்காயிரத்து 700 படுக்கை வசதிகளும் கூடுதலாக தயாராகிவருகின்றன.
மற்ற கட்டடங்களில் படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுவருவதால் அண்ணா பல்கலைக்கழகத்தில் விடுதிகளைப் பயன்படுத்த வேண்டிய தேவை ஏற்படவில்லை.
மாணவர்கள் விடுதிகளை வழங்குவதில் சிக்கல் இருப்பதால் மற்ற இடத்தில் தேவையான படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுவருகின்றன. தற்போது நடைபெற்றுவரும் 12 நாள் ஊரடங்கால் பல நன்மைகள் கிடைக்கும். இந்த ஊரடங்கினால் நகரில் 10% வாகன போக்குவரத்து மட்டுமே இயக்கத்தில் உள்ளது. இந்தப் பன்னிரெண்டு நாள் ஊரடங்கிற்குப்பின் பெருவாரியான தொற்று குறையும் என நம்புகிறோம்" எனத் தெரிவித்தார்.