புதுச்சேரி லாஸ்பேட்டையில் விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையம் கடந்த 30 ஆண்டுகளுக்கு
முன்பு தொடங்கப்பட்டது. புதுவை அரசின் தீவிர முயற்சியின் பேரில், கடந்த மூன்று ஆண்டுகளாக, புதுவையில்
இருந்து பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கு தனியார் விமானங்கள் இயங்கி வந்தன.
அதைத்தொடர்ந்து கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக புதுவை உட்பட சென்னை, திருச்சி விமான நிலையங்களிலும் விமான சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் சென்னை, பெங்களூரு, டெல்லி போன்ற சில பெருநகரங்களில் இருந்து விமான சேவைகள் சமீபத்தில் தொடங்கப்பட்டன. அதுவும் குறைந்த அளவிலான விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. இதுபோன்று புதுச்சேரியில் இருந்தும் விமானங்கள் மீண்டும் தொடங்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து வரும் நவம்பர் மாதம் புதுச்சேரியில் இருந்து ஹைதராபாத், பெங்களூரு நகரங்களுக்கு மீண்டும் விமானங்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதல் மத்திய அரசின் விமானத்துறையிடம் விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பின்னர் வழக்கம்போல், புதுச்சேரியில் இருந்து தினசரி விமான சேவைகள் இருக்கும் எனத் தெரிகிறது.