திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வளாகம் முன்பு நேற்று (ஜூலை 20) காலை 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர், தனது கையில் கொண்டுவந்த கேனிலிருந்த மண்ணெண்ணெயை ஊற்றி திடீரென தீக்குளிக்க முயன்றார்.
இதனைக் கண்ட காவல்துறையினர் மண்ணெண்ணெய் கேனை கைப்பற்றி, முதியவர் உடலில் தண்ணீரை ஊற்றி தீக்குளிப்பதிலிருந்து காப்பாற்றினர்.
இதனையடுத்து முதியவரிடம் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், அவர் திருவண்ணாமலை மாவட்டம் சொற்பனந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும், அவரது பெயர் முனியப்பன் என்றும் தெரியவந்தது.
80 வயதான முனியப்பன், தனக்கு ஆறு பிள்ளைகள் இருப்பதாகவும், தனது 3.2 ஏக்கர் நிலத்தை எழுதி வாங்கி, ஆளுக்கு சரிசமமாக பிரித்துக்கொண்டு, வயதான தன்னைக் கவனிக்காமல், உணவு வழங்காமல் பரிதவிக்கும் நிலையில் கைவிட்டுவிட்டதாகவும் கண்ணீரோடு கூறினார்.
ஆறு பிள்ளைகள் இருந்தும் தன்னை கவனித்துக்கொள்ள யாருமில்லை என்று அவர் காவல்துறையினரிடம் கண்ணீர் மல்க கதறி அழுதது பார்ப்பவர்களை கண்கலங்க வைத்தது.