மதுரை வசந்தநகர் 3ஆவது தெருவைச் சேர்ந்தவர் பத்ம ஸ்ரீ (70). இவர் இன்று அதிகாலை கோலம் போடுவதற்காக வீட்டு வாசலுக்கு வந்துள்ளார். அப்போது, நிலைதடுமாறி வீட்டின் அருகேயுள்ள மழைநீர் சேகரிப்பு தொட்டிக்குள் விழுந்துள்ளார். இதையடுத்து, கோலம் போடச் சென்ற மனைவியைக் காணவில்லை என அவரது கணவர் அக்கம்பக்கத்தில் தேடியுள்ளார்.
பின்னர் சந்தேகத்தின்பேரில் மழைநீர் சேகரிப்புத் தொட்டியைப் பார்த்தபோது தனது மனைவி கிடப்பதைக் கண்டு, தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், சுமார் 25 அடி ஆழமுள்ள மழைநீர் சேகரிப்புத் தொட்டியிருந்து மூதாட்டியை சடலமாக மீட்டனர். இச்சம்பவம் குறித்து சுப்பிரமணியபுரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மூதாட்டியின் மகள் வெளிநாட்டில் வசித்து வருகிறார். இவர்கள் இருவரும் வசந்தநகரில் தனியாக வசித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சென்னையில் ஊரடங்கு மீறல்: 33 ஆயிரம் வழக்குகள் பதிவு!