.
ஒடிசா மாநிலத்தில் ராஜேஷ் தல்வார் என்னும் ரயில் பயணி ஒருவர் ஹவுரா ரயில் நிலையத்திலிருந்து தொடர்வண்டி மூலம் சம்பல்பூர் பயணம் செய்திருக்கிறார். இந்நிலையில், ஜர்ஷுகுடா தொடர்வண்டி நிலைய நிறுத்தத்தில் வண்டி நின்றபோது, தேநீர் வாங்குவதற்காகக் கீழே இறங்கியுள்ளார் ராஜேஷ்.
ஒரு சில நிமிடங்களில் வண்டி கிளம்புவதற்காகத் தண்டவாளத்தில் தொடர்வண்டி நகர்ந்தது. இதனைச் சற்றும் எதிர்பார்க்காத பயணி, ஓடிச் சென்று ஏற முற்பட்டுள்ளார். அப்போது பயணி கால் வழுக்கி ரயிலுக்கும், நடைமேடைக்கும் இடையே தண்டவாளத்தில் விழுந்தார்.
துரிதமாகச் செயல்பட்ட அங்கிருந்த தொடர்வண்டி நிலைய ஊழியர்கள், பயணியைப் பத்திரமாக மீட்டனர். வண்டி மெதுவாக நகர்ந்ததால் இவரின் உயிரைக் காப்பாற்ற முடிந்தது என ஊழியர்கள் தெரிவித்திருக்கின்றனர். இதனையடுத்து சிறு காயங்களுக்கு முதலுதவி அளித்த பின்னர், ராஜேஷை அதே வண்டியில் அனுப்பிவைத்தனர்.