நீலகிரி மாவட்ட கரோனா தடுப்பு கண்காணிப்பு அலுவலர் சுப்ரியா சாஹு தலைமையில் குன்னூரில் சிறப்பு உயர் மட்ட அலுவலர்கள் ஆய்வு இன்று நடந்தது.
இதில், கரோனா தொற்று காரணமாக சீல்வைக்கப்பட்ட குன்னூர், மேல் வண்ணாரப்பேட்டை, வெலிங்டன், கீழ் குருஸ்பேட் ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
பின்னர் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், "நீலகிரி மாவட்டத்தில் வாகன போக்குவரத்து, பயணங்கள் மூலமாக அதிக அளவில் கரோனா தொற்று அதிகரித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் தவறான காரணங்களைக் கூறி வாகனங்கள் மூலம் நுழைபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். வாகன போக்குவரத்தைக் கட்டுப்படுத்துவதற்கான மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மாவட்ட எல்லையில் 16 சோதனைச் சாவடிகளில் மூன்று மூடப்பட்டுள்ளன. நீலகிரியில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களின் இரண்டாம் தொடர்பாளர்கள், வேறு மண்டலங்களிலிருந்து வருபவர்களுக்கு அதிக அளவில் பரிசோதனை செய்யப்பட்டுவருகிறது.
பழங்குடியின மக்கள் உள்பட கிராமங்களில் கூட்டம் சேராமல் இருக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
தேவையற்ற நிகழ்ச்சிகளை நடத்தி, வெளியூர்களைச் சேர்ந்தவர்கள் வந்தாலோ, உள்ளூரில் 50 பேருக்கு மேல் கூடினாலோ சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நிகழ்ச்சிகள் நடத்துவதைத் தவிர்க்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தொடாமலேயே பயணச்சீட்டு பரிசோதனை - மதுரை ரயில்வே அசத்தல்