கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கரும்பாட்டூர் ஊராட்சியில் பள்ளிக்கூட சாலை மிகவும் பழுதடைந்து இருந்தது. இதை சீரமைக்க ஊரக வளர்ச்சி, ஊராட்சி பொது நிதியிலிருந்து ரூ. 15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன் பிறகும் சாலை பணிகள் தொடங்கப்படாமல் இருந்தது. இதை கண்டித்து ஆஸ்டின் எம்எல்ஏ போராட்டங்களை நடத்தி அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில், இந்த சாலை பணி தொடங்கப்படும் என்று அலுவலர்கள் அறிவித்தனர். ஆஸ்டின் எம்எல்ஏ அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் தாமரை பாரதி உள்ளிட்ட திமுகவினர் அங்கு குவிந்தனர். அதே நேரத்தில் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரத்தின் தலைமையில் மாவட்டச் செயலாளர் அசோகன், ஒன்றிய பெருந்தலைவர் அழகேசன் உள்ளிட்ட அதிமுகவினரும் அங்கு குவிந்தனர்.
இரு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் ஒரே இடத்தில் திரளாக குவிந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் தளவாய் சுந்தரம், ஆஸ்டின் எம்எல்ஏ இருவரும் இணைந்து புதிய சாலை அமைக்கும் பணியை தொடக்கி வைத்தனர். தொடர்ந்து சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதேபோல், மருங்கூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சாலையை சீரமைக்க 14ஆவது திட்ட சிறப்பு நிதியில் ரூ. 40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகளையும் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், ஆஸ்டின் எம்எல்ஏ ஆகியோர் இணைந்து பணியை தொடக்கி வைத்தனர்.
கன்னியாகுமரி சட்டப்பேரவை தொகுதியில் தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம், ஆஸ்டின் எம்எல்ஏ ஆகியோர் இணைந்து அரசின் திட்டப் பணிகளை தொடக்கி வைப்பதில் போட்டியிட்டு வருவதால் ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் பரபரப்பு ஏற்படுகிறது.