எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளைக்கு புதிய நிர்வாக இயக்குநராக முனைவர் கே.எஸ். முரளி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மூன்று சகாப்தங்களாக வேளான்மை, காடுகள், தண்ணீர், உணவு ஆகிய மத்திய, மாநில, உலகளாவிய அரசு துறைகளில் உயர் அலுவலராக பணிபுரிந்துள்ளார்.
1960-களில் இந்தியாவில் உணவுப் பஞ்சம் தலைவிரித்தாடியது. அதைத் தடுக்க இந்திய அரசு பல தீவிர நடவடிக்கைகளை எடுத்தது. அதில் முக்கியமானது பசுமைப்புரட்சி. அதற்கு அடித்தளமிட்டவர், பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானியான பெஞ்சமின் பியாரி பால் (1906- 1989). கோதுமை சாகுபடியில் உயர் விளைச்சல் தரும் ரகங்களை உருவாக்கியவர் அவர்.
அவரது அடியொற்றி, உணவு தானிய உற்பத்தி பெருக்கத்துக்கான திட்டங்கள் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது (1966) தீட்டப்பட்டன. அப்போதைய மத்திய வேளாண்மைத்துறை அமைச்சர் சி.சுப்பிரமணியமும், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனும் அத்திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தினர்.
உயர் விளைச்சல் தரும் வீரிய ரகங்கள், மேம்பட்ட உரப்பயன்பாடு, முறையான நீர்ப்பாசனம், பூச்சிக்கொல்லி மருந்து, நிர்வாகம் ஆகிவற்றின் கலவையான இத்திட்டத்தால், 1970-களில் இந்தியாவின் உணவு தானிய உற்பத்தி, தேவையைவிட அதிகரித்தது. உணவுக்காக பிற நாடுகளைச் சார்ந்திருக்கும் நிலைமை அப்போது மாறியது.
இத்திட்டத்தின் நாயகராக தமிழ்நாட்டைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் கருதப்படுகிறார். இந்திய பசுமைப்புரட்சியின் தந்தை என்றும் அவர் அழைக்கப்படுகிறார்.
பசுமைப்புரட்சியின் பக்க விளைவுகளைச் சுட்டிக்காட்டி, சுவாமிநாதனைக் கடுமையாக விமர்சிப்பவர்களும் உண்டு. செயற்கை உரப் பயன்பாட்டால் மண் மலடாவதையும், மரபணு மாற்றப் பயிரினங்களால் உள்நாட்டு விதைகள் அழிவதையும் எதிர்ப்போர், சுவாமிநாதனைக் குற்றஞ்சாட்டுகின்றனர்.
சென்னையில் அவர் நிறுவிய எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை, நீடித்த வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சிக்கான பணிகளில் ஈடுபட்டுவருகிறது.