நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் பகுதியைச் சேர்ந்த 50 வயது பெண் தனது குடும்ப செலவுக்காக அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த நிதி நிறுவன அதிபரான சிவக்குமார் என்பவரிடம் கடந்த 2009ஆம் ஆண்டு கடன் பெற்றார். இதற்கான வட்டி தொகையை மாதம்தோறும் செலுத்தி வந்துள்ளார்.
2009ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி வட்டி தொகையை செலுத்த அப்பெண் தனது 19 வயது மகளிடம் பணத்தை கொடுத்து அனுப்பினார். நிதி நிறுவனத்திற்கு சென்று அவர் பணத்தை கொடுத்த போது அப்பெண்ணை சிவகுமாரும், அவரது நண்பர் ஆமையன் என்பவரும் பாலியல் வன்கொடுமை செய்து அதை காணொலி எடுத்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர்.
இது குறித்து அப்பெண் பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்த நிலையில் இவ்வழக்கு நாமக்கல் சிபிசிஐடி காவல் துறையினருக்கு மாற்றப்பட்டு வழக்கு நாமக்கல் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு நேற்று (ஜூலை 23) விசாரணைக்கு வந்தபோது, வழக்கில் 2ஆம் குற்றவாளியான ஆமையன் இறந்த நிலையில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில், நிதி நிறுவன அதிபர் சிவகுமாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 13 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையும் படிங்க: தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் பாலியல் வன்புணர்வுக்குள்ளான சிறுமி!