உலகளாவிய அச்சுறுத்தலாக மாறியிருக்கும் கோவிட்-19 பாதிப்பு இந்தியாவில் தீவிரமடைந்துவருகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் மூன்றாம் கட்ட அபாய நிலையை எட்டியிருக்கும் கரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. கரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக நாகை மாவட்டத்தில் 260 பேர் பாதிக்கப்பட்டும், 100 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நாளுக்கு நாள் அதிகாரித்துவரும் கோவிட்-19 பாதிப்பைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் பணிகளில் காவல்துறை, பொதுப்பணித்துறை, சுகாதாரத்துறை என மாவட்ட நிர்வாகத்தின் பல்வேறு துறைசார்ந்தவர்களும் ஈடுபட்டு வருகின்றனர். நாகை மாவட்ட நிர்வாகத்தின் இந்த பணிகளில் பல்வேறு தொண்டு நிறுவனங்களும், சமூக ஆர்வலர்களும், தன்னார்வலர்களும் தங்களை இணைத்து பணியாற்றுகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரி பகுதியைச் சேர்ந்த சித்த மருத்துவர் அஜ்மல்கான் என்பவர், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் கபசுரக் குடிநீரை தொடர்ந்து 100 நாள்களுக்கும் மேலாக பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறார். கொந்தகை, திட்டச்சேரி பேருந்து நிலையம், சந்தைக்கடை, நடுக்கடை காவல் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு நேரடியாக சென்று கபசுரக் குடிநீரை வழங்கிவருகிறார்.
பெரியவர்கள், சிறியவர்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் தகுந்த இடைவெளியை முறையாக பின்பற்றி, முகக் கவசங்களை அணிந்து கொண்டு வரிசையாக வந்து அவரிடம் கபசுரக் குடிநீரை வாங்கி பருகிவருகின்றனர். சித்தமருத்துவர் அஜ்மல்கானின் இந்த மனிதாபிமான செயல் பலரது பாராட்டையும் பெற்று வருகிறது.
உலகளவில் பெரும்பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கரோனா தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் தமிழர்களின் மரபுவழி மருத்துவமான சித்த மருத்துவத்தில் ஒன்றான கபசுரக் குடிநீரை, தமிழ்நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும் என சித்தா மற்றும் ஹோமியோபதி மருத்துவத்துறை இயக்குநரகம் (director of Indian medicine and homeopathy) உத்தரவிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.