நாகை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், செம்பனார்கோவில் அருகே திருச்சம்பள்ளியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை பருத்தி ஏலம் நடைபெறும்.
இந்த ஏலத்தில் 700க்கும் மேற்பட்ட விவசாயிகள் அறுவடை செய்த பருத்தியை இரண்டு நாட்களுக்கு முன்பே கொண்டுவந்து, ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விற்பனைக்கு வைப்பது வழக்கம்.
இந்நிலையில் கடந்த வாரம் சீர்காழியில் நடைபெற்ற பருத்தி ஏலத்தின்போது ஏற்பட்ட பிரச்னையைத் தீர்த்து வைக்க பேச்சுவார்த்தை நடத்திய வருவாய் ஆய்வாளர் ஒருவருக்கு கரோனா தொற்று அண்மையில் உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து ஜூலை 6-ம் தேதி வரை ஏலம் எடுப்பதில்லை என தனியார் வியாபாரிகள் கூடி முடிவெடுத்து அறிவித்தனர்.
இதையடுத்து செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திலும் இந்த வாரம் திங்கட்கிழமை ஏலம் கிடையாது என்று அறிவித்ததாகக் கூறப்படுகிறது. ஆனாலும், விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த பருத்தியை வாகனங்களில் ஏற்றி வந்து ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
ஆனால், அலுவலர்கள் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை திறந்துவிடாததால் ஏராளமான பருத்தி விவசாயிகள் 3000 குவிண்டாலுக்கு அதிகமாக பருத்தியை வாகனங்களிலேயே வைத்துக்கொண்டு காத்திருந்தனர். விற்பனைக் கூடத்தை திறக்காததைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து தரங்கம்பாடி வட்டாட்சியர் சித்ரா சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை திறந்துவிட்டார். இதையடுத்து, விவசாயிகள் தங்கள் பருத்தியை குடோன்களில் வைத்துள்ளனர்.
மேலும், திங்கள்கிழமை வழக்கம்போல் ஏலம் நடைபெறும் என்று அலுவலர்கள் தெரிவித்தனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.