கரோனா தொற்று வேகமாக பரவிவரும் நிலையில் அதைத் தடுக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் 6ஆம் கட்ட ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், ஜூலை மாதம் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு என தமிழ்நாடு அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் நாளை (ஜூலை 5) நகரில் உள்ள அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டு பால், மருந்துக்கடை தவிர முழு ஊரடங்கு கடைபிடிக்க வேண்டும் என்பதை பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில், ஸ்ரீவில்லிபுத்தூர் நகரின் முக்கிய பகுதிகளில், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையம் தற்காலிக காய்கறிச் சந்தை போன்ற பல்வேறு பகுதிகளில் பழங்கால வழக்கமான தண்டோரா மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது.
மேலும், இனிவரும் காலங்களில் முகக்கவசம் அணியாமல் தகுந்த இடைவெளி இல்லாமல் வெளியே சுற்றும் பொதுமக்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.