இந்திய சினிமாவில் பழம்பெரும் நடிகராக திகழ்ந்தவர் அம்ரிஷ் பூரி. 1932 ஜுன் 22ஆம் தேதி பஞ்சாபில் பிறந்த இவர், சிறு வயதில் இருந்தே சினிமாவில் இருந்த ஈர்ப்பு காரணமாக நாடகத்தில் நடித்துவந்தார்.
பின்னர், தனது 39ஆவது வயதில் இந்தி திரைப்படத்தில் அறிமுகமான இவர், தொடர்ந்து வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களுக்கு மறக்கமுடியாத திரைப்படங்களை தந்தார்.
அதுமட்டுமல்லாது பாலிவுட்டின் சிறந்த வில்லன் நடிகராக உலா வந்து இவர், ஹாலிவுட் படத்திலும் தனது வில்லத்தனத்தை முத்திரை பதித்தார்.
புகழ்பெற்ற ஸ்டீஃபன் ஸ்பில்பெர்க் இயக்கத்தில் 1981, 1984இல் வெளியான 'இந்தியானா ஜோன்ஸ்', 'இந்தியானா ஜோன்ஸ் அண்ட் தி டெம்பிள் ஆஃப் டூம்' என்ற பிரபல திரைப்படத்திலும் நடித்துள்ளார். இதுதவிர, 1981இல் வெளியான காந்தி திரைப்படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்து, தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியிருப்பார்.
இவரது திரைப்பயணத்தில் இந்தி படங்களை தவிர்த்து கன்னடா, தெலுங்கு, தமிழ் போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக, 1991இல் மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி, மம்மூட்டி நடிப்பில் வெளியான 'தளபதி' படத்திலும் இவர் 'கலிவர்தன்' என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்திருப்பார். இதைத்தொடர்ந்து 2002இல் பாபா திரைப்படத்திலும் மந்திரவாதி கதாபாத்திரத்திலும் நடித்தார்.
200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவர், டிசம்பர் 27 2004இல் புற்றுநோய் காரணமாக உயிரிழந்துள்ளார். தனது சிறந்த நடிப்பிற்காக பல்வேறு விருதுகளை வென்று இந்திய திரைத் துறையில் மறக்க முடியாத நடிகராக திகழ்ந்துள்ளார்.
இந்நிலையில், இன்று இவரது 87ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, கூகுள் டூடுல் அவரை கவுரவித்துள்ளது.