கரூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் இளைஞர்கள் சுமார் 1,000 பேர் அதிமுக உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளிலிருந்து விலகி, திமுகவில் மாவட்ட பொறுப்பாளரும், அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினருமான செந்தில் பாலாஜி முன்னிலையில் கட்சியில் இணைந்தனர்.
அப்போது, அவர்களுக்கு செந்தில் பாலாஜி வரவேற்பும் வாழ்த்தும் தெரிவித்து அவர்களிடையே சிறப்புரையாற்றினார். இதையடுத்து அவர் பேசுகையில், "கரூரில் அமராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள திருமாநிலையூர் பாலமும், வாங்கல்-மோகனூர் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலமும் திமுக காலத்தில் கட்டப்பட்டது.
அதேபோல், அமராவதி ஆற்றின் குறுக்கே ஐந்து ரோடு பகுதியில் கட்டிய பாலமும், கரூருக்கு குடிநீர் திட்டமும் தான் அமைச்சராக பணியாற்றிய காலத்தில் கொண்டு வந்த திட்டங்கள்.
கடந்த நான்கரை ஆண்டுகள் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் கரூருக்கு ஏதாவது ஒரு நன்மையாவது கிடைத்திருக்கிறதா? ஏழை,எளிய மக்கள் தங்கள் வீட்டுத் திருமணத்தை குறைந்த வாடகையில் நடத்த மூன்று கோடி மதிப்பீட்டில், உழவர் சந்தை அருகே திருமண மண்டபம் கட்டி முடித்து, மூன்று ஆண்டுகள் ஆகியும் திறக்கப்படாமல் உள்ளது.
என்னுடைய முயற்சியால் கட்டப்பட்ட கட்டடம் என்பதற்காகவே திறக்கப்படாமல் உள்ளது. தேர்தல் காலம் நெருங்கி விட்டது. தேர்தல் நேரத்தில் இளைஞர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். நீங்கள் வீட்டிற்குச் சென்றதும், உங்களுக்கு வலை வீசுவார்கள். பின்னர் விலை பேசுவார்கள்" என்றார்.