மதுரை மாவட்டம் பெத்தானியபுரத்தில் அமைச்சர் செல்லூர் ராஜு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
அப்போது, பெண் ஒருவர் அப்பகுதி நியாயவிலைக் கடையில் அரிசி குறைவாக வழங்கப்படுவதாகவும் தனக்கு வழங்கிய அரிசியுடன் அமைச்சரிடம் புகார் அளித்தார்.
இதைத்தொடர்ந்து, அமைச்சர் செல்லூர் ராஜு அந்தப் பெண்ணுடன் அப்பகுதி நியாயவிலைக் கடைக்குச் சென்று கடை விற்பனையாளரிடம் விசாரணை நடத்தினார்.
அப்போது கடையில் சம்பந்தம் இல்லாமல் இருந்த பெரியசாமி என்பவரைக் கைதுசெய்யவும், விற்பனையாளர் தர்மேந்திரனைப் பணியிடை நீக்கம்செய்யவும் உத்தரவிட்டார்.
இது குறித்து புகார் தெரிவித்த கார்த்திகா செல்வி, "எங்கள் பகுதியில் உள்ள நியாயவிலைக் கடையில் பொருள்கள் முறையாக வழங்குவதில்லை.
வழங்கக்கூடிய பொருள்கள் தரம் குறைந்தும் எடை குறைவாகவும் வழங்குவதாக அமைச்சரிடம் புகார் தெரிவித்தேன்.
இதைக் கேட்ட அமைச்சர் உடனடியாக கடைக்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்தார்" எனத் தெரிவித்தார்.