சென்னை காசிமேடு உள்ளிட்ட பகுதிகளில் தகுந்த இடைவெளியுடன் கூடிய மீன்கடைகள் அமைப்பது தொடர்பாக, சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் சென்னை பெருநகர ஆணையர் பிரகாஷ், சென்னை காவல்துறை ஆணையர், மீனவர் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “முதலமைச்சர் அறிவித்துள்ள தளர்வுகளின்படி மீன் சந்தைகள் இயங்கலாம் என்ற கட்டுபாட்டு தளர்வை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மீன் புரத சத்து மிகுந்த உணவாகும், அது மக்களுக்கு அது எளிதாக கிடைக்க வேண்டும். மீன் விற்பனை தொடங்குவது குறித்து மீனவர்களின் பிரதிநிதிகளுடன் ஆலோசிக்கப்பட்டு அவர்களின் கோரிக்கைகள் கேட்கப்பட்டது. மீன் விற்பனையின்போது தகுந்த இடைவெளி, சானிடைசர், முகக்கவசம் பயன்படுத்துவது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மண்டல துணை பொறியாளர் தலைமையில் ஒவ்வொரு மார்க்கெட்டிற்கும் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மார்க்கெட்டின் நுழைவு வாயிலிலும் சானிடைசர் வைக்க வேண்டும், முகக்கவசம் அணியாமல் யாரையும் அனுமதிக்க கூடாது. கடைகளில் வியாபாரம் செய்பவர்கள் தகுந்த இடைவெளி கடைபிடிக்க வேண்டும் உள்ளிட்ட உறுதிமொழிகளை ஏற்று கடைபிடிப்பதாக மீனவ பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்” என்றார்.
இதையும் படிங்க: கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்!