செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் எல் அண்ட் டி தனியார் நிறுவனம் மூலம் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் ரூ.1.5 கோடி செலவில் புதிதாக நிறுவப்பட்டுள்ளது.
இதனை ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் திறந்துவைத்தார். அப்போது அவர் பேசுகையில், “இந்த உற்பத்தி நிலையமானது ஒரு மணி நேரத்திற்கு 600 லிட்டர் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் கொள்ளளவு கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டு வருவதாகவும் இதனால் இனி தமிழ்நாட்டில் ஆக்சிஜன் தட்டுப்பாடு வருவதற்கு வாய்ப்பு இல்லை” எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி. செல்வம், செங்கல்பட்டு சட்டப்பேரவை உறுப்பினர் வரலட்சுமி மதுசூதன், செங்கல்பட்டு அரசு மருத்துவமனை முதல்வர் முத்துக்குமார், அரசு அலுவலர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள், திமுக நிர்வாகிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.