கன்னியாகுமரி மாவட்டம், இரணியலை அடுத்துள்ள குருந்தன்கோடு வீரவிளையை சேர்ந்தவர் மணிகண்டன்(30). 19ஆவது பட்டாலியன் ராணுவ வீரரான இவர் பிகார் மாநிலத்தில் பணிபுரிந்து வந்தார்.
இவர் கடந்த மார்ச் மாதம் 7ஆம் தேதி நாக்காவில் பணியில் இருந்தபோது, அவ்வழியாக மாடுகளை கடத்தி சென்ற வாகனத்தை மறித்து பிற ராணுவ வீரர்களுடன் சேர்ந்து சோதனை செய்துள்ளார். அப்போது, அக்கும்பல் மணிகண்டன் உள்பட 3 ராணுவ வீரர்களை கம்பு, மற்றும் ஆயுதங்களால் தாக்கிவிட்டு தப்பி சென்றுள்ளனர்.
இதில், படுகாயடைந்த மூவரும் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதையடுத்து, மார்பு பகுதியில் தொற்று ஏற்பட்டு மணிகண்டன் தொடர்ச்சியாக வென்ட்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த 5 ஆம் தேதி இரவு மணிகண்டன் இறந்து போனார். ராணுவ வீரர் மணிகண்டனின் உடல் இன்று மாலை திருவனந்தபுரம் விமான நிலையம் வந்து சேர்ந்தது. பின்னர் அங்கிருந்து அவரது சொந்த ஊரான வீரவிளைக்கு கொண்டு செல்லப்படுகிறது. அவரது உடல் ராணுவ மரியாதையுடன் நாளை அடக்கம் செய்யப்படுகிறது.