திருப்பூர் மாவட்டத்திலிருந்து தற்போதுவரை 32 சிறப்பு ரயில்கள் மூலம் ஒடிசா, பீகார், ஜார்கண்ட் , உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 45 ஆயிரம் தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அது தவிர தனிப்பட்ட முறையில் தனியார் பேருந்துகள் ஏற்பாடு செய்து சுமார் 15 ஆயிரம் பேர் சொந்த ஊர் சென்றிருக்கிறார்கள் என மாவட்ட நிர்வாகத்தினர் தெரிவிதுள்ளனர்.
இருப்பினும் சொந்த ஊர் செல்ல வேண்டும் என விண்ணப்பித்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இன்னும் காத்துக் கொண்டிருக்கின்றனர். இதனிடையே கடந்த ஒரு மாதமாக சிறப்பு ரயில்கள் ஏதும் இயக்கப்படாத சூழ்நிலையில், இன்று மேற்குவங்கம், ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டது.
நீலகிரி, சேலம், நாமக்கல், ஈரோடு என தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தங்கியிருந்த மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலார்கள் இன்று திருப்பூர் அழைத்து வரப்பட்டு, சிறப்பு ரயில் மூலம் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
திருப்பூர் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்ட சிறப்பு ரயில் மூலம் 1,300 வெளிமாநில தொழிலாளர்கள் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
முன்னதாக அவர்களுக்கு உடல் வெப்பநிலை கணக்கிடப்பட்டு, தேவையான உணவு, குடிநீர் ஆகியவை மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்து கொடுக்கபட்டது.