ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் நடு பாளையத்தைச் சேர்ந்தவர் ஞானவேல். இவர் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி திருப்பூர் பனியன் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இதனிடையே, இவர்கள் வீடு புனரமைக்க மைக்ரோ ஃபைனான்ஸில் 2 லட்சம் ரூபாய் கடன் பெற்றனர்.
இதனிடையே, வாங்கிய 2 லட்சம் ரூபாய் கடனை வட்டியுடன் திருப்பிச் செலுத்துமாறு மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனங்கள் வற்புறுத்தி வந்த நிலையில், நேற்று முன்தினம் (ஜூன் 8) ஞானவேல் வீட்டுக்குச் சென்ற மைக்ரோ ஃபைனான்ஸ் ஊழியர் ஒருவர், வட்டியுடன் கட்டியே ஆக வேண்டும் என்று வற்புறுத்தினார். இதையடுத்து அங்கு திரண்ட கிராம மக்கள், ஃபைனான்ஸ் ஊழியரை சிறைபிடித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து, அங்கு வந்த காவல்துறையினர் ஃபைனான்ஸ் ஊழியரை மீட்டனர். பின்னர் மைக்ரோ ஃபைனான்ஸ், கடன் பெற்றோர் இடையே சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் சத்தியமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், ரிசர்வ் வங்கி கட்டளையின்படி மூன்று மாதங்களுக்கு கடனை திருப்பி கேட்கக் கூடாது என முடிவெடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, மைக்ரோ ஃபைனான்ஸ் ஊழியர்கள் திரும்பிச் சென்றனர்.