விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகேயுள்ள சடையம்பட்டி கிராமத்தில் முத்துகிருஷ்ணன் (45) என்பவருக்கு சொந்தமான திரவியம் மேல் ஒர்க்ஸ் தீப்பெட்டி தொழிற்சாலை இயங்கி வருகிறது.
இங்கு தீப்பெட்டி இயந்திர தொழிற்சாலையில் தயார் செய்த தீக்குச்சிகளை வாங்கி வந்து தீப்பெட்டிகள் தாயரித்து வந்துள்ளனர்.
சுமார் 15க்கும் மேற்பட்ட பெண்கள் இங்கு பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில் இன்று இயந்திர தீப்பெட்டி தொழிற்சாலையிலிருந்து கொண்டுவரப்பட்ட தீக்குச்சி மூட்டைகளை இங்கு வைக்கும்போது உராய்வினால் தீவிபத்து ஏற்பட்டது.
இதனால், அங்கு பணிபுரிந்தவர்கள் அலறியடித்து வெளியே ஓடிவந்துள்ளனர். தீ விபத்தில் பார்வதி (50) என்பவருக்கு கை கால்களில் தீக்காயம் ஏற்பட்டதால் சிகிச்சைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து விரைந்து வந்த சாத்தூர் தீயணைப்புத் துறையினர், தீயை அணைத்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
பின்னர் புகை மண்டலம் குறைந்தபின்பு தீப்பெட்டி தொழிற்சாலையின் குறுகிய அறைக்குள் சென்று பார்த்த போது கிருஷ்ணம்மாள் (60) என்பவர் மூச்சுத்திணறி இறந்த நிலையில் கிடந்தார்.
இதையடுத்து, அவரின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் இதுகுறித்து சாத்தூர் தாலுகா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.