திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகில் 2019 - 20 ஆம் ஆண்டிற்கான பயிர்காப்பீட்டுத் தொகை வழங்காத அரசைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் நகரச் செயலாளர் ரகுராமன் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது அவர்கள், விடுபட்ட அனைத்து விவசாயிகளுக்கும் உடனடியாக இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும், மகசூல் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீட்டு கிடைக்கும் வகையில் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் மாற்றம் கொண்டுவர வேண்டும், விவசாயிகளுக்கான காப்பீட்டு பிரீமியம் மானியத் தொகையில் மத்திய அரசின் 50 சதவீத பங்கினை 25 சதவீதமாகக் குறைத்ததை மத்திய அரசு கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இந்தச் சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. எனவே காவல் துறையினர் போராட்டக்காரர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் மாவட்ட அலுவலர்களின் வாக்குறுதியின் பேரில் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.