கரோனா வைரஸ் காரணமாக தினக்கூலி தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து நடிகர் மன்சூர் அலிகான் ஆடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், " நான்கு மாதங்களுக்கு மேல் ஊரடங்கு உத்தரவு போட்டு வணிகர்களும், விவசாயிகளும், மக்களும், வீட்டுக்குள் முடக்கி வயிற்றுப் பசிக்கு வழி கூறாத தலைவர்களே. கரோனா என்பது ஒரு கொடிய நோய் அல்ல. அதற்கான மருந்துகளும், மருத்துவ உபகரணங்களும் உங்களிடம் இல்லை. போன் செய்தால் ஒரு மணி நேரம் லெக்சர் தருகிறீர்கள். நோயாளியுடன் அல்ல நோயுடன் போராடுங்கள் என்று கூறுகிறீர்கள்.
பின் எதற்காக தொலைக்காட்சிகளில் நோய் தொடர்பாக பீதியைக் கிளப்புகிறார்கள். இறந்தவர் உடல்களை இறுதி மரியாதை செய்ய முடியாமல் அனாதை போன்று குப்பை வண்டிகளில் ஏற்றி மக்களை கலவரப்படுத்துகிறீர்கள். கரோனாவிலிருந்து மக்களை காக்க தலைகீழாக அடித்து தொங்கவிட்டு மக்களை பாதுகாக்கின்றனர் காவல் துறையினர்.
வெளிநாடுகளில் கரோனாவால் இறந்தவர்கள் உள்ளனர். ஆனால், பசியால் இறந்தனர் என்று செய்திகள் வருகிறதா? வீட்டிற்கு சென்று ரேஷன் பொருட்களை கொடுக்கின்றனர் வெளிநாடுகளில். அதே போன்று இங்கும் செய்ய வேண்டும். ஊரடங்குக்காக மக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டும் என்றால் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வது உங்களின் கடமை. இல்லை என்றால் மாதக்கணக்கில் மக்களை இப்படி அடைத்து வைப்பதற்கு எந்த சட்டத்திலும் இடம் இல்லை.
இதை நீதிபதிகளும், வக்கீல்களும் மக்களுக்கு எடுத்துக்கூற வேண்டும். பக்கத்துத் தெருவிற்கு போகமுடியவில்லை பாகிஸ்தான் பார்டர் போன்று சார்மினார் போட்டு அமர்ந்துகொண்டு காவல் துறையினர் மக்களை வதைக்கின்றனர். இந்திய எல்லையில் ராணுவ வீரர்களை காவு கொடுக்கிறீர்கள். நாட்டிற்குள் மக்களை உணவு இல்லாமல் கடன் தொல்லைக்கு உள்ளாக்கி போலீஸ் அடி கொடுத்து மக்களை சாகடிக்கிறார்கள்.
கரோனா என்று மக்களை திசைதிருப்பி அமைதியாக நீங்கள் நிறைவேற்றிக் கொள்ளும் சட்டங்களை மக்கள் ஏற்றுக் கொள்ளாமல் புரட்சி ஏற்படும் என்பதை நீங்கள் மறந்துவிடாதீர்கள். கரோனா எப்போது முடியும் என்பது கடவுளுக்குத்தான் தெரியும் என்று தமிழ்நாடு முதல்வரும் கரோனாவோடு வாழ பழகிக் கொள்ளுங்கள் என்று சுகாதார அமைச்சகமும் கூறிவிட்டது. மக்கள் உணவிற்காகவும் வேலைக்காகவும் போராடுகிறார்கள். அவர்களுக்கு உதவி செய்யுங்கள் உணவளியுங்கள்" என்று கூறியுள்ளார்.