பிரதமர் நரேந்திர மோடி நேற்று மனத்தின் குரல் நிகழ்ச்சியின் மூலமாக, இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கரோனா துயர் துடைப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த பல்வேறு நபர்களைப் பாராட்டிப் பேசியிருந்தார்.
அதில், "குறிப்பாக மதுரையைச் சேர்ந்த முடித்திருத்தும் தொழிலாளி மோகன் அவருடைய மகளின் எதிர்காலத்திற்காகச் சேமித்துவைத்திருந்த ஐந்து லட்சம் ரூபாயை எடுத்து ஏழை, எளிய மக்களுக்காக அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வழங்கினார்.
மோகனின் இந்தப் பணி பாராட்டுக்குரியது, வரவேற்கத்தக்கது" எனப் பேசியிருந்தார். இதையடுத்து, மோகனின் வீட்டிற்கு உள்ளூர் பாஜகவினர் சென்று பொன்னாடைப் போர்த்தி அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில், மோகன் குடும்பத்துடன் தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டதாக அக்கட்சியின் மதுரையைச் சேர்ந்த உள்ளூர் பிரதிநிதி எஸ்.ஜி. சூர்யா அவரது ட்விட்டர் பக்கத்தில் படத்துடன் வெளியிட்டிருந்தார்.
இது குறித்து மோகனைத் தொடர்புகொண்டு கேட்டபோது, "பாஜகவில் உறுப்பினராக இணையச் சொல்லி அக்கட்சியின் நிர்வாகிகள் என்னைக் கேட்டுக் கொண்டதையடுத்து நானும் எனது மனைவியும் இணைந்துள்ளோம்" என்றார்.