திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி இருள்நீக்கி கிராமத்தை சேர்ந்த பிஆர் பாண்டி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்களான திருச்சி, தஞ்சை, உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் பல லட்சம் ஏக்கர் நிலங்கள் காவிரி நீரை கொண்டு பாசன வசதி பெறுகின்றன.
உச்ச நீதிமன்றம் 177 . 25 டிஎம்சி தண்ணீரை தமிழ்நாட்டிற்கு வழங்க உத்தரவு பிறப்பித்தது. தமிழ்நாடுஅரசு கடந்த 2019 நவம்பர் 12ஆம் தேதி பொதுப்பணித் துறை சார்பில் அரசாணை பிறப்பித்துள்ளது. அதன்படி டெல்டா பாசனத்திற்காக வழங்கப்படும் தண்ணீரில், உபரி நீரை குழாய் மூலமாக எடப்பாடிக்கு கொண்டு செல்லவது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.
முதலமைச்சர் இதுதொடர்பாக சட்டப்பேரவையில் எவ்விதமான விவாதத்தையும் நடத்தாமல் அவசரமாக இந்த அரசாணையை பிறப்பித்துள்ளார். தனது சொந்த தொகுதிக்கு மட்டும் நன்மையை செய்யும் வகையில், இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆகவே இவற்றை கருத்தில்கொண்டு காவிரியின் உபரி நீரை எடப்பாடிக்கு குழாய் மூலமாக கொண்டு செல்வதற்காக பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு, முன்பாக விசாரணைக்குவந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் வீரகதிரவன், உபரி நீர் எனக்கூறுகிறார்கள், ஆனால் அணைக்குள்ளாகவே சென்று நீரை எடுத்து பம்ப் செய்து, நீரேற்று மையம் மூலமாக குழாய் மூலம் எடப்பாடி கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படடுள்ளது. ஆகவே இடைக்கால தடை விதிக்க வேண்டும்" என தெரிவித்தார்.
அதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதிகள் இதுகுறித்து காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் மாநிலப் பொதுப்பணித்துறை முதன்மை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: கோவையில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து - ஒருவர் உயிரிழப்பு