கரோனா தொற்றுநோய் பரவலைத் தொடர்ந்து கடந்த 2 மாதங்களாக சென்னை உயர் நீதிமன்றம் மூடப்பட்டுள்ளது. முக்கிய வழக்குகளை நீதிபதிகள் தங்கள் வீடுகளில் இருந்தே காணொலி சந்திப்பின் மூலமாக விசாரித்து வந்தனர்.
இது தொடர்பாக உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் குமரப்பன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் நிர்வாகக் குழு தீர்மானத்தின் அடிப்படையில் உயர் நீதிமன்ற வழக்குகள் விசாரணையில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
உயர் நீதிமன்ற வளாகத்தில் நீதிபதிகள் தங்கள் அறைகளில் இருந்து காணொலி காட்சி மூலம் கடந்த 1ஆம் தேதி முதல் வழக்குகளை விசாரித்து வந்த நிலையில் இந்த திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதாவது இரு நீதிபதிகள் கொண்ட இரண்டு அமர்வுகளும், 4 தனி நீதிபதிகளும் மட்டுமே அவசர மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை விசாரிப்பர்.
நீதிபதிகள் தங்கள் வீடுகளில் இருந்து காணொலி காட்சி மூலம் விசாரணை நடத்துவார்கள். இந்த உத்தரவு ஜூன் 8 ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கறிஞர்கள் தங்கள் வழக்குகளை காணொலி மூலமாக அல்லாமல் நேரடியாக ஆஜராகி வாதிட அனுமதிக்க வேண்டும் என வழக்கறிஞர் சங்கங்கள் மற்றும் தமிழ்நாடு பார் கவுன்சில் வலியுறுத்தி வரும் நிலையில், தலைமை பதிவாளரின் இந்த அறிவிப்பு வழக்கறிஞர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்துயுள்ளது.
முன்னதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை விசாரித்து வந்த 3 நீதிபதிகள், நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் மத்திய நிர்வாக தீர்ப்பாய ஊழியர் ஒருவர் என மூவருக்கு கோவிட்-19 உறுதியானதாக செய்திகள் வெளியாகியிருப்பது கவனிக்கத்தக்கது.
இதையும் படிங்க :