கோயம்பேடு சந்தைகளில் அதிகப்படியாக கரோனா தொற்று ஏற்பட்டதன் விளைவாக அங்கிருந்த காய்கறி, பழச்சந்தைகள் வெவ்வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன.
குறிப்பாக, பழச்சந்தை மாதவரம் பேருந்து நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. சந்தையில் உள்ள மொத்த வியாபார கடைகளில் பழங்கள் வாங்க வியாபாரிகள், விற்பனையாளர்கள் என ஒரு நாளைக்கு சுமார் 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் பேர்வரை வந்து செல்கின்றனர்.
கோயம்பேட்டில் இக்கடைகள் செயல்பட்டு வந்தபோது அங்கு போதிய இட வசதிகள், அடிப்படை வசதிகள் ஏற்கனவே இருந்தது. தற்போது அதற்கான போதிய வசதிகள் ஏதும் இல்லாமல் உள்ளதால் கரோனா போன்ற தொற்று பரவி வரும் இந்த சமயத்தில் அரசால் அறிவிக்கப்பட்ட சுகாதாரத்தை பேணிக் காப்பதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பாக பழச்சந்தை நிர்வாகி மணிவண்ணன் கூறுகையில், "ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் இங்கு சரியாக பராமரிப்பு செய்யப்படாத நான்கு கழிவறைகள் மட்டுமே உள்ளன. தினந்தோறும் சி.எம்.டி.ஏ அலுவலர்களும், மாநகராட்சி அலுவலர்களும் கைகளை அடிக்கடி கழுவுங்கள், சுகாதாரமாக இருங்கள், நோய் தொற்று பரவாதபடி செயல்படுங்கள் என ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். ஆனால் அதற்கான எந்த நடவடிக்கைகளையும் செயல்படுத்தவில்லை.
ஏற்கனவே போதிய இட வசதிகள் இல்லாமல் அவதிக்குள்ளாகும் எங்களுக்கு சுகாதாரமாக இருப்பதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. தற்காலிகமாக பழச்சந்தை அமைக்க ஒதுக்கப்பட்டுள்ள இங்கு கழிவறை வசதிகள், தண்ணீர் வசதிகளை செய்து தர வேண்டும்.
இது தொடர்பாக மாதவரம் மண்டல அலுவலரை தொடர்புகொண்டு கேட்டபோது, "பழ வியாபாரிகளின் கோரிக்கையில் நியாயம் உள்ளதை மறுக்க முடியாது. அவர்கள் எதிர்பார்க்கும் சுகாதார வசதிகளை மேம்படுத்த சி.எம்.டி.ஏ அலுவலர்களிடம் பேசி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: 10ஆம் வகுப்பு தேர்வு: தமிழ்நாடு மாணவர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும்-எஸ்.டி.பி.ஐ!