ஐரோப்பிய கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதில், டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் (இங்கிலாந்து) - அயாக்ஸ் (நெதர்லாந்து) அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் கட்ட அரையிறுதிப் போட்டியில், அயாக்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது கட்ட அரையிறுதிப் போட்டி, அயாக்ஸ் அணியின் சொந்த மைதானமான ஆம்ஸ்டர்டாம் அரினாவில் நேற்று நடைபெற்றது. ஆட்டத்தின் ஐந்தாவது நிமிடத்திலேயே அயாக்ஸ் வீரர் டி லிஜிட், ஹெட்டர் முறையில் கோல் அடித்தார். இதைத்தொடர்ந்து, 35ஆவது நிமிடத்தில் அயாக்ஸ் அணி மீண்டும் இரண்டாவது கோலை அடித்தது. இம்முறை அந்த அணி தரப்பில் ஹக்கிம் ஸியேச் (Hakim Ziyech) அசத்தலான கோல் அடித்தார். இதனால், முதல் பாதி ஆட்ட நேர முடிவில் அயாக்ஸ் அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்று இருந்தது.
இதையடுத்து, இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கியதில் இருந்தே டோட்டன்ஹாம் அணி தாக்குதல் ஆட்டத்தை கையாண்டது. குறிப்பாக, அந்த அணியின் ஸ்டிரைக்கர் லூகாஸ் மோரா ஆட்டத்தின் 55ஆவது, 59ஆவது என அடுத்தடுத்து இரண்டு மெர்சலான கோல் அடித்தார். இதனால், ஆட்டம் சூடுபிடிக்கத் தொடங்கியது.
இதைத்தொடர்ந்து, ஆட்டம் 90ஆவது நிமிடத்தை எட்டிய நிலையில், இவ்விரு அணிகளுக்கும் ஆட்டத்தை தொடர கூடுதலாக ஐந்து நிமிடம் வழங்கப்பட்டது. இதில், ஆட்டத்தின் கடைசி நொடிகளில், டோட்டன்ஹாம் வீரர் லூகாஸ் மோரா ஹாட்ரிக் கோல் அடித்தார். இதனால், டோட்டன்ஹாம் அணி இப்போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் திரில் வெற்றிபெற்றது.
இதன் மூலம், இவ்விரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில், இரு அணிகளும் தலா 3 கோல் அடித்தனர். இருப்பினும், அவெ ஹோமில் (எதிரணி மண்ணில்) டோட்டன்ஹாம் அணி அதிகமான கோல் அடித்ததால், அதன் அடிப்படையில் அந்த அணி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.
ஆட்டத்தின் இறுதி நொடியில் டோட்டன்ஹாம் அணி வெற்றிபெற்றதால், அந்த அணியின் பயிற்சியாளர், வீரர்கள் என அனைவரும் மைதானத்தில் ஆனந்தக் கண்ணீர் விட்டு வெற்றியை உற்சாகமாய் கொண்டாடினர். இதைத்தொடர்ந்து, ஜூன் 2ஆம் தேதி மாட்ரிட் நகரில் நடைபெறவிருக்கும் இறுதிச் சுற்றில் டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணி, லிவர்பூல் அணியை எதிர்கொள்கிறது.
இந்த அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என கால்பந்து விளையாட்டு வல்லுநர்கள், ரசிகர்கள் என யாரும் எதிர்பாராத நிலையில் இவர்களின் வெற்றி கால்பந்து உலகில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.