ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தை அடுத்துள்ள தாளவாடி சுற்றுவட்டாரப்பகுதிகளில் கால்நடை வளர்ப்பு, விவசாயம் ஆகியவையே பெரும்பான்மையான மக்களால் பிரதானத் தொழிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மலைக்காடு சார்ந்த நிலவமைப்பைக் கொண்டிருப்பதால் தாளவாடி, பைனாபுரம், மல்லன்குழி, தொட்டகாசனூர், அருள்வாடி, கெட்டிவாடி, திகினாரை உள்ளிட்ட 25 கிராமங்களில் முட்டைக்கோஸ் சாகுபடி அதிகளவில் செய்யப்படுகிறது.
தமிழ்நாடு மற்றும் பிற மாநில சந்தைகளில் முட்டைகோஸுக்கு நல்ல விலை கிடைப்பதால், இந்த பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் ஆர்வமாக முட்டைக்கோஸை பயிரிடுகின்றனர்.
இது குறித்துப் பேசிய விவசாயிகள் கூறுகையில், "90 நாள்களில் அறுவடைக்கு வரும் கோஸ் பயிருக்கு, தற்போது நாற்றுநடவுப் பணி நடைபெற்று வருகிறது.
குழித்தட்டுகளில் வளர்க்கப்பட்ட கோஸ் நாற்று ஒன்று, 60 பைசாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அவற்றை வாங்கி வந்து, இங்கே நாங்கள் நடவு செய்கிறோம். ஒரு ஏக்கர் நிலத்தின் நடவுக்கு சுமார் 22 ஆயிரம் நாற்றுகள் தேவைப்படும். ஒரு ஏக்கர் நிலத்தில் 15 டன் மகசூல் கிடைக்கும். ஏறத்தாழ 20 ஆயிரம் ஏக்கர் அளவில் இங்கு முட்டைக்கோஸ் சாகுபடி செய்யப்படுகிறது" என்கின்றனர்.
முட்டைக்கோஸுக்குப் பாரமரிப்பு செலவு குறைவு. அதுமட்டுமின்றி பாசனத்திற்கான தண்ணீர் தேவையும் குறைந்தளவு தான். இதனால் இந்தப் பகுதிகளில் நுண்நீர் மேலாண்மை திட்டத்தில், சொட்டுநீர்ப் பாசன முறை பின்பற்றப்படுகிறது.
கிலோ ஒன்றுக்கு ரூ.2.50 வரை உற்பத்தி செலவு பிடிக்கும், முட்டைக்கோஸ். அறுவடையின் போது கிலோ ரூ.10 வரை வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படும் என அறிய முடிகிறது.