எல்.ஐ.சி வகுப்பு முதல்நிலை அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, இந்திய காப்பீட்டு கள தொழிலாளர்கள் கூட்டமைப்பு மற்றும் அகில இந்திய காப்பீட்டு ஊழியர் சங்கம் ஆகிய மூன்று தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளன.
இது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தொழிற்சங்கங்கள் எழுதியுள்ள கடிதத்தில், "எல்.ஐ.சி இன்று ரூ. 32 லட்சம் கோடிக்கு மேல் சொத்துக்களை நிர்வகித்து வருகிறது. இந்த விரிவாக்கம் பாலிசி வைத்திருப்பவர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட நிதி மூலம் நிகழ்ந்திருக்கிறது. தற்போது, எல்.ஐ.சியில் பங்குகளில் ஒரு பகுதியை மத்திய அரசு விற்க முடிவு செய்யும் போது, இவர்கள் அனைவரும் பாதிப்படைவார்கள் என நாங்கள் சொல்கிறோம்.
எல்.ஐ.சி பங்குகளை விற்பனை செய்யும் அரசின் முடிவுக்கு எதிராக நாங்கள் இதுவரை எழுதிய கடிதங்கள் அனைத்தும் தேசிய பொருளாதாரம் மற்றும் இந்திய மக்கள் சமுதாயத்தின் நலன்களை அடிப்படையாகக் கொண்டே முன்வைக்கப்பட்டுள்ளது. எங்கள் நிலைப்பாடும், எதிர் வாதங்களும் நாட்டின் நலனை மட்டுமே முன்னிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
எங்கள் தரப்பின் வாதங்களை அரசு தீவிரமாகப் பார்க்கும் என்றும், ஊழியர்கள் நிறுவனத்தில் மிக முக்கியமான பங்குதாரர்களில் ஒருவராக இருப்பதைக் கருத்தில்கொள்ளும் என்றும் நாங்கள் எதிர்பார்த்தோம். எங்களின் வாதங்களை முன்வைக்க நேரடியாக ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்றும் நாங்கள் நம்பினோம். அவை எதுவும் நடைபெறவில்லை என்பதால் ஏமாற்றம் அடைந்திருக்கிறோம்.
எல்.ஐ.சியின் ஆரம்ப பொது வழங்கலுக்கான (ஐ.பி.ஓ) பரிவர்த்தனை ஆலோசகர்கள் நியமிப்பது மற்றும் எல்.ஐ.சியில் தனியார் முதலீடு செய்ய அனுமதிப்பது குறித்த மத்திய அரசின் முடிவானது, ஏழை எளிய நடுத்தர பிரிவுகளைச் சேர்ந்த மக்களைக் கடுமையாக பாதிக்கும். எனவே, இந்த முடிவுகள் குறித்து மறுபரிசீலனை செய்யுங்கள் " என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
எல்.ஐ.சியின் ஐ.பி.ஓ தொடர்பான செயல்முறைகளில் உதவிக்கு பரிவர்த்தனைக்கு முன் ஆலோசகர்களை ஈடுபடுத்துவது தொடர்பாக முதலீட்டு மற்றும் பொது சொத்து மேலாண்மைத் துறையின் (டிஐபிஏஎம்) முன்மொழிவுக்கான கோரிக்கையை (ஆர்.எஃப்.பி) வெளியிட்டது தொடர்பாக இந்த மூன்று தொழிற்சங்கங்கள் மத்திய நிதியமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தது கவனிக்கத்தக்கது.