தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு, சந்தேகமான முறையில் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவத்தை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இந்த வழக்கு விசாரணையில் ஈடுபட்டுவரும் மாஜிஸ்திரேட் பாரதிதாசனை, சாத்தான்குளம் காவல் துறையினர் தரக்குறைவாக பேசியுள்ளனர். இது குறித்து அவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பதிவாளருக்கு மின்னஞ்சல் மூலம் புகார் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மாஜிஸ்திரேட்டை தரக்குறைவாக பேசியதைக் கண்டித்து வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு நடைபெற்ற கண்டன போராட்டத்தில் 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பங்கேற்றனர்.
காவல் துறையினரின் மரியாதையற்ற பேச்சு நீதித்துறைக்கு ஏற்பட்ட களங்கமாகும், எனவே சம்பந்தப்பட்ட காவல் துறை அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் அவர்கள் வலியுறுத்தினர்.
இதையும் படிங்க: 'குங்குமமும் வேண்டாம் வளையலும் வேண்டாம்' அடம் பிடிக்கும் மனைவிக்கு விவாகரத்து கொடுத்த உயர் நீதிமன்றம் சசம்பவம்