சேலம் மாவட்டம் முழுவதும் கரோனா தொற்று வேகமாக பரவி வருவதை கட்டுப்படுத்த மாவட்ட சுகாதாரத்துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகம் இணைந்து பல்வேறு நோய்த்தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், இன்று (ஆக.25) சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட நான்கு மண்டலங்களில் உள்ள பொதுமக்களை தொற்றிலிருந்து பாதுகாக்கவும், நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் காய்ச்சல், சளி அறிகுறி இருப்பவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ள சிறப்பு வாகன மருத்துவகுழு சேவையை மாவட்ட ஆட்சியர் ராமன் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
இக்குழுவில் மருத்துவர், செவிலியர் உட்பட ஐந்து பேர் இடம் பெற்றுள்ளனர். மாநகரம் முழுவதும் 40 நடமாடும் வாகனம் மூலமாக, ஒரு வாகனம் மூன்று முகாம்களுக்கு சென்று பரிசோதனை மேற்கொள்ள உள்ளது. தினசரி 120 இடங்களில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
மேலும் பரிசோதனையை மேற்கொள்ள வரும் பொதுமக்களுக்கு இலவசமாக முகக்கவசம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், சேலம் மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் மற்றும் மாநகர காவல் ஆணையாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.