டெல்லி: ஜிஎஸ்டி வரி செலுத்துவோருக்கு ஒரு பெரிய நிவாரணமாக, ஜிஎஸ்டிஆர் -3 பி படிவத்திற்கான அதிகபட்ச அபராத கட்டணத்தை 500 ரூபாயாக நிர்ணயிக்க மத்திய நிதியமைச்சகம் முடிவுசெய்துள்ளது.
முன்னதாக, ஜூன் 12ஆம் தேதி நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், ஜூலை 2017 முதல் ஜனவரி 2020 வரையிலான காலகட்டத்தில் ஜிஎஸ்டிஆர் -3 பி வருமானத்தை தாக்கல் செய்யாததற்கான தாமத கட்டணத்தை ரூ. 500ஆக குறைக்க முடிவு செய்தது. பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய மாதங்களில் தாமதமாக வரி செலுத்துவோருக்கு வட்டி விகிதத்தையும் குறைத்தது.
2019ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஜிஎஸ்டி வரி வருவாய் ரூ. 90,917 கோடியாக மட்டுமே இருந்துள்ளது. இதில் மத்திய ஜிஎஸ்டியாக (CGST) ரூ. 18,980 கோடியும், மாநில ஜிஎஸ்டியாக (SGST) ரூ. 23,970 கோடியும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியாக (IGST ) ரூ. 40,302 கோடியும் வசூல் செய்யப்பட்டுள்ளது. மேலும், இறக்குமதி செய்யப்பட்ட பொருள்கள் மூலமாக ரூ.15,709 கோடியும், செஸ் வரியாக ரூ.7,665 கோடியும் வசூல் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் ஜூன் மாதத்திற்கான வருவாயானது கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் வசூலான ஜிஎஸ்டி வருவாயில் 91 விழுக்காடாகும். அதேபோல, இந்த மாதத்தில் இறக்குமதியான பொருள்கள் மூலம் கிடைத்த வருவாய் சென்ற ஆண்டு அளவில் 71 விழுக்காடாகும். மத்திய ஜிஎஸ்டியின் கீழ் ரூ.13,325 கோடியும், மாநில ஜிஎஸ்டியின் கீழ் ரூ.11,117 கோடியும் மத்திய அரசு பணத்தை திரும்ப வழங்கியுள்ளது. அதன் பிறகு மத்திய அரசும், மாநில அரசுகளும் 2020 ஜூன் மாதத்தில் ஈட்டிய மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.32,305 கோடியாகும். இதில் மாநில ஜிஎஸ்டி வருவாய் ரூ.35,087 கோடி.
கரோனா பாதிப்பால் நடப்பு நிதியாண்டின் ஜிஎஸ்டி வருவாயில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சர்வதேச அளவில் ஏற்பட்ட மந்த நிலையால் பொருளாதாரத்தில் வீழ்ச்சி ஏற்பட்டது. அதன் பின்னர் வருமான கணக்குகளைத் தாக்கல் செய்வதிலும், வரி செலுத்துவதிலும் மத்திய அரசு அளித்த தளர்வுகள் காரணமாகவும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனினும் கடந்த மூன்று மாதங்களில் சற்று முன்னேற்றம் ஏற்படத் தொடங்கியுள்ளது. ஏப்ரல் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.32,294 கோடியாக இருந்தது. அதைத் தொடர்ந்த மே மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ. 62,009 கோடியாகும். இது 2019ஆம் ஆண்டு இதே மாதத்தில் வசூலான தொகையில் 62 விழுக்காடாகும்.