கோவை மாவட்டம், சிங்காநல்லூர் பகுதியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொது செயலாளர் ஈஸ்வரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "தமிழ்நாட்டில் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஆனால் அது குறித்து எவ்வித அறிவிப்பும் வெளிப்படையாக இல்லாமல் இருக்கிறது.
தமிழ்நாட்டில், தூய்மைப் பணியில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதை உணர முடிகிறது. எடுத்துக்காட்டாக நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் பணியில் உள்ள ஒப்பந்த பணியாளர்கள் குறித்து நாமக்கல் மக்களவை உறுப்பினர் ஆய்வு செய்ததில் 190 பேர் உள்ளதாக பதிவேட்டில் இருக்கிறது.
ஆனால், 45 பேர் மட்டுமே பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நான்கில் ஒரு பங்கு மட்டுமே ஊழியர்கள் பணியில் இருக்கும் பொழுது அதிக பணியாளர்களை கணக்கு காண்பிப்பது முறைகேட்டிற்கு உதாரணம்" என்றார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், "தமிழ்நாட்டில் சரியான முறையில் பணிகள் மேற்கொள்ளாது தான் கரோனா தொற்று அதிகமாக பரவுவதற்கு காரணம். தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் தூய்மைப் பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று அரசு தெரிவிக்கும் நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் நடந்தது போல் அனைத்து பகுதிகளிலும் நடந்தால் எவ்வளவு பெரிய முறைகேடு நடந்திருக்க கூடும்.
ஆண்டுக்கு சுமார் 1400 கோடி வரை மக்களின் வரிப்பணம் வீணாகிறது. இதுதொடர்பாக உள்ளாட்சித்துறை அமைச்சர் உரிய விசாரணையை மேற்கொள்ள வேண்டும். ஒப்பந்த பணியாளர்களுக்கு பணி நேரத்தை பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்ய வேண்டும்.
தலைவர்களின் சிலைகள் அவமதிப்பது மக்களை திசைதிருப்பும் முயற்சி. அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் சட்டப் பேரவை தேர்தலை குறிக்கோளாக வைத்து சிலர் இந்த வேலைகளை செய்வது மிகவும் கண்டிக்கத்தக்கது.
கந்தசஷ்டிகவசம் தொடர்பாகவோ அல்லது கோயிலை தாக்கப்பட்டது தொடர்பாக இதுவரை முதலமைச்சர் வாய் திறந்தாரா?, கோவையிலுள்ள ஆலைகளில் அபராதத்துடன் மின் கட்டணம் வசூலிக்கும் நடவடிக்கையை மின் வாரியம் நிறுத்திக் கொள்ள வேண்டும். பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் மின் கட்டணத்தை அபராதத்துடன் செலுத்தியவர்களின் தொகையை திரும்பி வழங்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: கரோனா நோயாளிகள் ரஜினி பாட்டுக்கு குத்தாட்டம்!