டெல்லியில் நடைபெற்ற மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையக் (டிடிஎம்ஏ) கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் அரவிந்த் கெஜிரிவால், ”நாடு முழுவதும் அறிகுறியின்றி கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை வீடுகளிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அனுமதி வழங்கியுள்ளது. பின்பு ஏன் டெல்லியில் மட்டும் தனியாக ஒரு புதிய நடைமுறையைப் பின்பற்ற வேண்டும்.
மாநிலத்தில் பொரும்பாலான மக்கள் அறிகுறியின்றி கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை அரசு காட்டுப்பாட்டில் தனிமைப்படுத்தினால் அவர்களுக்கான தேவையை எவ்வாறு பூர்த்தி செய்ய இயலும். மத்திய அரசால், ரயில் பெட்டிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தனிமைப்பட்ட அறைகளில் வெப்பம் அதிகளவில் இருப்பதால் அங்கு நோயாளிகளைத் தங்கவைக்க முடியாது” என்று கூறியுள்ளார்.
இதுதொடர்பாக ட்வீட் செய்துள்ள டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, "மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், வீடுகளில் தனிமைப்படுத்தலை அகற்றும் துணைநிலை ஆளுநரின் உத்தரவை நாங்கள் எதிர்ப்போம். அதை மாற்றுமாறு கோருவோம். இந்த உத்தரவு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் வழிகாட்டுதல்களுக்கு எதிரானது. இது டெல்லியில் குழப்பத்தை உருவாக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக இக்கூட்டத்தில் பேசிய மாநிலப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தலைவரும், துணைநிலை ஆளுநருமான அனில் பைஜால், அனைத்து அறிகுறியற்ற கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களும், லேசான தொற்று அறிகுறிகள் உள்ளவர்களும் வீடுகளில் தனிமைப்படுத்தப்படுவதற்குப் பதிலாக ஐந்து நாள் மருத்துவமனையில் அல்லது தனிமைப்படுத்தல் மையங்களில் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று உத்தரவிட்டிருந்தார்.