வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த காந்தி நகர் 6ஆவது கிழக்கு குறுக்கு சாலை பகுதியில் ஆனந்தன் என்பவர் வசித்துவருகிறார். எலெக்ட்ரீஷியனாக வேலை செய்துவரும் இவர், வழக்கம் போல் இன்று வேலைக்காக வெளியே சென்றுள்ளார்.
இதையடுத்து, மே 20ஆம் தேதி பிற்பகல் திடீரென ஆனந்தனின் வீட்டில் தீ பற்றி எரிந்துள்ளது.
இதை கவனித்த அக்கம்பக்கத்தினர் காட்பாடி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து, சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் அரை மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இந்த தீவிபத்தில் ஆனந்தன் வீட்டில் இருந்த குளிர்சாதனப்பெட்டி, குளிரூட்டி (ஏசி), மேசை நாற்காலி உள்ளிட்ட சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி நாசமாகின.
இந்த விபத்து குறித்து காட்பாடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். காவல் துறையினர் நடத்திய முதல்கட்ட விசாரணையில் ஆனந்தனின் வீட்டில் இருந்த குளிர்சாதனப்பெட்டியில் மின் கசிவு ஏற்பட்டதன் காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.
இருப்பினும் இந்த விபத்து ஏற்பட வேறு ஏதாவது காரணம் உள்ளதா என்று கோணத்திலும் காவல் துறையினர் தொடர்ந்து விசாரித்துவருகின்றனர்.