கன்னியாகுமரி, நாகர்கோவில் கணேசபுரத்தைச் சேர்ந்தவர் இளைஞர், காசி. இவர் இளம் பெண்களை ஆபாசப்படம் எடுத்து, மிரட்டி பணம் பறித்ததாக, எழுந்தப் புகாரில் கைது செய்யப்பட்டார். கோட்டார் காவல் துறை இதுகுறித்து விசாரித்து வந்த நிலையில் காசி, அவரது கூட்டாளிகள் சேர்ந்து மேலும் பல பெண்களை மிரட்டி, பணம் பறித்து இருப்பது தெரியவந்தது.
இது தொடர்பாக காசி மீது ஆறு பேர் அடுத்தடுத்து புகார்கள் அளித்தனர். இதைத் தொடர்ந்து இந்த வழக்கு சிபிசிஐடி காவல் துறையினருக்கு மாற்றப்பட்டது. அவர்கள் நடத்திய விசாரணையில் காசியின் நெருங்கிய கூட்டாளி தினேஷ் என்பவர், கடந்த சில நாள்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார்.
தினேஷ் பெண்களுடன் ஆபாசமாக இருக்கும் படங்களை அந்தப் பெண்களுக்கு அனுப்பி, அவர்களை மிரட்டி பலாத்காரம் செய்ததாக காவல் துறை விசாரணையில் தெரிய வந்தது. மேலும், காவல் துறை விசாரணையில், காசியின் நெருங்கிய நண்பர்கள் மேலும் சிலர் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்துள்ளது.
எனவே, அவர்களையும் கைதுசெய்ய காவல் துறையினர் தீவிரமாக முயற்சித்து வருகின்றனர். இதில் ஒருவர் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. அவரை சிபிசிஐடி காவல் துறையினர் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து, விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் மேலும் பல ரகசிய தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் சிறையில் இருக்கும் காசி மீது போடப்பட்ட 3 லட்சம் ரூபாய்க்கான மோட்டார் இருசக்கர வாகன மோசடி வழக்கில், நீதிமன்ற குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சிபிசிஐடி காவல் துறையினர் தயாராகி வருகிறார்கள். இதற்கான ஆவணங்களைத் திரட்டும் பணி தீவிரமாக நடந்துவருகிறது.
அதன்படி விலை உயர்ந்த இருசக்கர வாகனம் காசியின் பெயருக்கு மாறியது எப்படி என்பது குறித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர், போக்குவரத்து அலுவலர்களிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதேபோல தனியார் வங்கி மேலாளர்களிடமும் இருசக்கர வாகனம் யார் பெயரில் எடுக்கப்பட்டது, எப்படி காசியின் பெயருக்கு மாறியது என்பது குறித்தும் விசாரணை நடைபெற்றது.
இந்த விசாரணையைத் தொடர்ந்து ஆவணங்கள் அனைத்தும் தயாரானதும் காசி மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
காசியின் மீது தற்போது இருசக்கர வாகன மோசடி வழக்கில் காவல் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவுள்ள நிலையில் இவர் மீது பதியப்பட்டுள்ள 6 வழக்குகளும் தனித்தனியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.