கந்த சஷ்டி பாடலை தவறான முறையில் விமர்சனம் செய்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், கடந்த மாதம் சுரேந்திரன் மீது சேலம் கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த நகை மதிப்பீட்டாளர் சக்ரபாணி என்பவர் சேலம் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தார்.
அவரது புகார் மனுவில், "கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் கந்தசஷ்டி குறித்து தவறாக யூடியூப்பில் வெளியிட்டுள்ளார். இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார்.
இந்த புகார் மனுவை சேலம் சைபர் கிரைம் பிரிவு காவல் ஆய்வாளர் தங்கவேல் விசாரணை செய்து சுரேந்திரன் மீது வழக்குப்பதிந்து அவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு விசாரணை தற்போது நடந்து வரும் நிலையில், புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சுரேந்திரன் இன்று மாலை, பலத்த காவல் பாதுகாப்புடன் சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அழைத்து வரப்பட்டார்.
இதையடுத்து, சுரேந்திரன் நீதித்துறை நடுவர் எண் 2 மாஜிஸ்திரேட் சிவா முன் சுரேந்திரன் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கை மாஜிஸ்ட்ரேட் சிவா விசாரித்து சுரேந்திரனை வருகிற 31 ஆம் தேதி வரை காவலில் அடைக்க உத்தரவிட்டார்.
பின்னர் சுரேந்திரன் பலத்த காவல் பாதுகாப்புடன் புழல் சிறையில் அடைக்க மீண்டும் அழைத்துச் செல்லப்பட்டார். சுரேந்திரன் சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையொட்டி காவல் பாதுகாப்பு பலப்படுத்த பட்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.