தூத்துக்குடி மாவட்டம், சாத்தன்குளத்தில் வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் உயிரிழந்த சம்பவத்தில் சிபிசிஐடி காவல் துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து ஐந்து காவலர்களைக் கைது செய்தனர்.
இந்த சம்பவத்தில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பைச் சேர்ந்த நான்கு பேருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்த நிலையில், அவர்கள் நால்வரும் தலைமறைவாகினர்.
இதனைத் தொடர்ந்து, ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பினரின் மீதான பல்வேறு குற்றச்சாட்டுகளும் வெளிவந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாவட்ட காவல் நிலையங்களில் ஃபிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்புக்குத் தடை விதித்து உத்திரவிடப்பட்டு வருகிறது.
அந்த வகையில், குமரி மாவட்டத்திலும் ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பினர் செயல்படத் தடை விதித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஶ்ரீநாத் உத்தரவிட்டுள்ளார்.
குமரி மாவட்டத்தில் 30க்கும் மேற்பட்ட காவல் நிலையங்கள் உள்ளன. இந்தக் காவல் நிலையங்களில் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் தவிர மற்ற காவல் நிலையங்கள் அனைத்திலும் ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பினர் ஈடுபடுத்தப்பட்டு வந்தனர்.
ஒரு நாளைக்கு சராசரியாக இந்த அமைப்பைச் சேர்ந்த 60 பேர் வரை குமரி மாவட்டக் காவல் நிலையங்களில் பணிக்கு வந்து சென்ற நிலையில், தற்போது காவல் கண்காணிப்பாளர் உத்தரவைத் தொடர்ந்து இவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்தந்த சப் டிவிஷன்களுக்கு இது தொடர்பான உத்தரவை காவல் கண்காணிப்பாளர் ஶ்ரீநாத் பிறப்பித்துள்ளார்.
இந்த உத்தரவை அனைத்து காவல் நிலையங்களிலும் முறையாக கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: காவல் துறையினரின் மன அழுத்த பரிசோதனை - பிரேம் ஆனந்த் சின்ஹா ஐபிஎஸ்