12ஆவது ஐபிஎல் தொடர் விறுவிறுப்பானக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்தத் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
இந்நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான 54ஆவது லீக் போட்டி, பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில், டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கோலி முதலில் பந்துவீசத் தீர்மானித்தார். இதைத்தொடர்ந்து, முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. இருப்பினும், ஆட்டத்தின் இறுதிக் கட்டத்தில், அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சனின் அதிரடியான ஆட்டத்தால் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 175 ரன்களை குவித்தது.
இப்போட்டியில், முதல் 37 பந்துகளில் 43 ரன்களை எடுத்த வில்லியம்சன் அடுத்த ஐந்து பந்துகளில் 23 ரன்களை சேர்த்தார். இறுதியில் அவர் 70 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். உமேஷ் யாதவ் வீசிய இறுதி ஓவரில் தலா இரண்டு பவுண்டரிகள், இரண்டு சிக்சர்களை பறக்கவிட்டார். பெங்களூரு அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர் மூன்று, நவ்தீப் சைனி இரண்டு, விக்கெட்டுகளை சாய்த்தனர்.