இந்தியா - சீனா எல்லைப் பகுதியான லடாக்கில் சீனா தனது ராணுவத்தை கடந்த மாதம் குவித்தது. அதற்கு பதிலடியாக இந்தியாவும் தனது ராணுவத்தை குவித்ததால் எல்லையில் போர் சூழும் அபாயம் ஏற்பட்டது.
அதைத்தொடர்ந்து இரு நாட்டு ராணுவ உயர் அலுவலர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சமரசம் அடைந்தனர்.
இதற்கிடையில் நேற்றிரவு இரு நாட்டிற்கும் இடையே நடந்த தாக்குதலில், இந்திய ராணுவத்தைச் சேர்ந்த ஒரு அதிகாரி மற்றும் இரண்டு வீரர்கள் உள்பட 3 பேர் வீரமரணம் அடைந்தனர். அதில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பழனியும் ஒருவர்.
இந்நிலையில், இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "எல்லையில் சீன வீரர்களுடனான மோதலில் உயிரிழந்த இராமநாதபுரத்தைச் சேர்ந்த இந்திய வீரர் பழனி அவர்களின் வீரத்திற்கும், தியாகத்திற்கும் தலைவணங்குகிறோம்.
அவர் குடும்பத்திற்கு நம் அன்பும், ஆழ்ந்த அனுதாபங்களும். உயிர்களின் மதிப்பறிந்தவர் போரை விரும்ப மாட்டார்கள். அமைதி வழி தீர்வு காண்போம்" என்று குறிப்பிட்டுள்ளார்.